உச்சி வெயில் பொழுது - தீக்
குச்சி தானே பற்றுவது எளிது!
சிறுவனுக்கு வயதோ ஆறு - அவன்
பொறுமைக்கு வயதோ நூறு! தினமும்
வெறுமையே பார்த்த வயிறு! வாழவைப்பதோ
வறுமையை வீழ்த்திய பாசக் கயிறு!
ஆம், பொறுமையாக நின்றான் வரிசையில்!
நீளமோ சீனப் பெருஞ்சுவரை மிஞ்சும் - நிற்கும்
களமோ கதிரவனின் கனலை விஞ்சும்
கிழிந்த கால்ச் சட்டை,
முதுகில் நாமப் பட்டையிட்டது
ஆசிரியரின் மரக்கட்டை!
விலங்கைக் கடித்து விலங்கு உண்ணும்
விலங்கை அடித்து மனிதன் உண்பான்
மனிதனை மடித்து விலங்கும் உண்ணும்
மனிதனை அடித்து மனிதன் உண்பானா?
ஆதாரம் அந்த வரிசயில் உண்டு!
வலிமை மிக்க, வன்மை சொக்க
வாட்டசாட்டமான வாண்டுகள் முன்னே!
நலிவுற்று, நூலாய் நைந்து நசிந்து
வாட்டமடைந்த வண்டுகள் பின்னே!
விரலாலே சரியாக எண்ணி விடலாம் அவனிடத்தை -
விரைவாக வரிசையின் பின்னால் இருந்து!
தொட்டியில் மிதக்கும் மீனைப் போல் - வாங்கி வருபவர்
தட்டில் மிதக்கும் சோற்று பருக்கைகள்!
பணக்காரனுக்குஅதைப் பார்த்தால் பசியே எடுக்காது!
பாமர சிறார்க்கு அதைப் பருகினால் பசி எடுக்காது!
சத்துணவு என்று பெயர் - உண்டுவிட்டு
செத்துப் பிழைப்பதோ உயிர்!
--
பள்ளி சென்று வருவதே பெரும்பாடு - பாதையில்
கள்ளிச் செடி நிறைந்த முற்காடு! இடையில் பிணத்தை
அள்ளிச் சென்று எரிக்கும் சுடுகாடு! வழியில்
எள்ளி நகையாடும் நண்பர்களின் கூப்பாடு! இருதலைக்
கொள்ளி எறும்பு வாழ்கை ஏன் பிற்பாடு?
ஏன்?
... அவனுக்கு அதுவே அன்றைய முதற் சாப்பாடு!
முதற் காதல், முதல் முத்தம், முதற் கலவி -
இவற்றை விட உந்துதல் அதிகமாய்,
பற்றுதல் பலமாய் இருப்பது முதல் சாப்பாடு!
முற்றும் முழுவதுமாய் நாளுக்கு ஒரே சாப்பாடு!
பெற்ற அன்னையாய் வாழ்வளிக்கும் முதற் சாப்பாடு!
உற்ற நண்பனாய் காத்து நிற்கும் உயிர் சாப்பாடு!